விபத்தில் தொழிலாளி பலி; டிரைவருக்கு சிறை உறுதி
திருப்பூர்; ஊட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார், 30. லாரி டிரைவர். இவர் கோழிப்பண்ணை கழிவு ஏற்றிக்கொண்டு, 2016 ஏப்., 15ல் ஊட்டி சென்றார். லாரியில் மயில்சாமி உட்பட, ஏழு பேர் பின்னால் அமர்ந்து இருந்தனர். குன்னத்துார் அருகே லாரி கவிழ்ந்ததில் மயில்சாமி இறந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக குன்னத்துார் போலீசார் வழக்குபதிவு செய்து, டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணையில், ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட்டில் நடந்தது. அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய குற்றத்துக்காக, சரவணக்குமாருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சரவணகுமார், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஊத்துக்குளி கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.