உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுால் விலை, 3 ரூபாய் உயர்வு! பஞ்சு விலையில் மாற்றம் எதிரொலி; தொழில்துறையினர் கடும் அதிருப்தி

நுால் விலை, 3 ரூபாய் உயர்வு! பஞ்சு விலையில் மாற்றம் எதிரொலி; தொழில்துறையினர் கடும் அதிருப்தி

திருப்பூர் : பஞ்சு விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நுால்விலை உயர்ந்துள்ளது; அனைத்து ரக நுால்களும் கிலோவுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், தொழில் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு, பஞ்சு விலை சீராக இருந்ததால், நுால் விலை உயரவில்லை; இருப்பினும், நுால் வர்த்தகத்துக்காக, விலை குறைப்பு செய்யப்பட்டது. அதாவது, 2024ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, நான்கு மாதங்கள் வரை, நுால் விலை, கிலோவுக்கு 45 ரூபாய் வரை விலை குறைந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், புதிய ஏற்றுமதி ஆர்டர் வரத்து தடைபட்டது. ஆர்டர் குறைந்து உற்பத்தியும் மந்தமாகியதால், நுால் கொள்முதலிலும் மந்தம் நிலவியது.இந்நிலையில், 2024ம் ஆண்டு நவ., மாதம், மேலும் கிலோவுக்கு 10 ரூபாய் வரை விலை குறைந்தது. அதற்கு பின்னரும், சில வகை ரகங்களுக்கு மட்டும், 2025 ஜன., மாதம், ஏழு ரூபாய் வரை விலை குறைப்பு ஏற்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக, பஞ்சு விலை, ஒரு கேண்டி (356 கிலோ), 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போதும், பஞ்சு விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின், விலை சற்று உயர்ந்து வருகிறது. பஞ்சு வரத்தும், ஆறு மாதங்களில், 200 லட்சம் பேல்களுக்கு அதிகமாக விற்பனை நடந்துள்ளது.இந்நிலையில், அனைத்து நுால் ரகங்களுக்கும், கிலோவுக்கு மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது, 2025ம் ஆண்டு துவக்கத்தில், சில ரகங்களுக்கு மட்டும், ஏழு ரூபாய் வரை விலை குறைந்தது; அதனை ஈடுகட்டும் வகையில், கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை உயர்த்தப்பட்டதாக, நுாற்பாலைகள் தரப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, பஞ்சு இறக்குமதிக்கான வரியை சில மாதங்கள் ரத்து செய்யும்பட்சத்தில், பஞ்சு இறக்குமதி அதிகரிக்கும். இதன் காரணமாக, பஞ்சு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய நிலையில், நுாற்பாலைகள் தரப்பு, கிலோவுக்கு மூன்று ரூபாய் அளவுக்கு தற்போது விலையை உயர்த்தியுள்ளது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நுால் விலை நிலவரம்

'கோம்டு' ரக நுால்(வரி நீங்கலாக - ஒரு கிலோ)20 ம் நம்பர் - 261 ரூபாய்25ம் நம்பர் - 266 ரூபாய்30ம் நம்பர் - 271 ரூபாய்34ம் நம்பர் - 279 ரூபாய்4ம் நம்பர் -297 ரூபாய்'செமி கோம்டு' ரக நுால்(வரி நீங்கலாக - ஒரு கிலோ)20ம் நம்பர் - 251 ரூபாய்25ம் நம்பர் - 256 ரூபாய்30ம் நம்பர் - 261 ரூபாய்34ம் நம்பர் - 269 ரூபாய்40ம் நம்பர் - 287 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை