திருப்பதிக்கு செல்ல கொல்லம் ரயிலிலும் முன்பதிவு செய்யலாம்
திருப்பூர்,; 'கோவை - திருப்பதி இன்டர்சிட்டி வாராந்திர எக்ஸ்பிரஸ்க்கு மாற்றமாக கொல்லம் - திருப்பதி ரயில் இயங்குகிறது; கோவையில் இருந்து ரயில் இயங்காத நாளில், கொல்லம் ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்,' என, டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கோவையில் இருந்து திருப்பதிக்கு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:22615) இயக்கப்படுகிறது. காலை, 6:10 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், மதியம், 1:20 மணிக்கு திருப்பதி செல்கிறது. மறுமார்க்கமாக, மதியம், 3:00 மணிக்கு திருப்பதியில் (எண்:22616) புறப்பட்டு இரவு, 10:20 மணிக்கு கோவை வந்தடைகிறது.கோவையில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி இயங்குகிறது; திங்கள், புதன், சனி கோவையில் இருந்து ரயில் இயக்கமில்லை.திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் (எண்:22615) ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இயக்கமில்லை; திங்கள், புதன், வியாழன், சனி இயங்குகிறது; வியாழன் ஒரு நாள் மட்டும் இரு மார்க்கத்திலும் ரயில் உண்டு.இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில், கொல்லம் - திருப்பதி இடையே பயணிக்கும் ரயிலில் (எண்: 17422) கூட்ட நெரிசல் குறைவாக உள்ளது.ரயில் பயணிகள், திருப்பதி செல்லும் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவுக்கு உதவ இந்த ரயில் கோவை - திருப்பதி ரயில் இயங்காத நாட்களில் (புதன், சனி) இயக்கப்படுகிறது. எனவே, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் கொல்லம் ரயிலில் முன்பதிவு செய்து, பயணிக்கலாம் என, ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.புதன், சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் காலை, 10:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரயில், மாலை, 6:35 மணிக்கு கோவை வருகிறது; திருப்பூருக்கு, 7:20 மணிக்கு வருகிறது.திருப்பதிக்கு, மறுநாள் அதிகாலை 3:25 மணிக்கு சென்றடைகிறது என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.