நெடுஞ்சாலை குழிகளை மூட களமிறங்கிய இளைஞர்கள்
பல்லடம்; பல்லடம் அருகே, நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த குழிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டு வந்த நிலையில், களம் இறங்கிய வணிகர்கள் மற்றும் இளைஞர்கள் குழிகளை மூடினர். பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டு லட்சுமி நகர் பகுதி வழியாக, அருள்புரம், கரைப்புதுார் செல்லும் ரோடு உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில் குழிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஓராண்டாக குழிகள் மூடப்படாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், குழிகளை மூட நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு வீணானது. இதனையடுத்து, மண்வெட்டி சகிதமாக களம் இறங்கிய இப்பகுதி வணிகர்கள் மற்றும் இளைஞர்கள், சிமென்ட் கலவை கொண்டு குழிகளை மூடினர். இளைஞர்கள் கூறுகையில், 'கடந்த ஓராண்டாக இங்குள்ள குழிகளால் வாகன ஓட்டிகள் பலரும் தடுமாறி சென்று வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில், குழிகளால் இடையூறு ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலை துறை, ஊராட்சி நிர்வாகம் என, யாருமே நடவடிக்கை எடுக்காத நிலையில், இப்பகுதியில் கட்டட கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், கட்டட உரிமையாளரின் அனுமதியுடன், சிமென்ட், ஜல்லி கலவை பெற்று, குழிகளை நாங்களே மூடினோம்,' என்றனர்.