செஞ்சி அருகே பல்லவர் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு
செஞ்சி:திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர், செஞ்சி அரசு கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர் தலைமையில் மாணவர்கள், செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பல்லவர் கால சிலைகள் இருப்பதை கண்டறிந்தனர்.பேராசிரியர் சுதாகர் கூறியதாவது:இங்குள்ள பள்ளி வளாகத்தில் ஜேஷ்டா தேவி எனும் மூத்த தேவி சிற்பம் உள்ளது. இந்த சிற்பம், 105 செ.மீ., உயரம், 80 செ.மீ., அகலம் கொண்ட மென்கூட்டு சிற்பமாக உள்ளது. மூத்ததேவி இரு கால்களையும் பக்கவாட்டில் அகற்றிய நிலையில், இரு கரங்களை தொங்க விட்டவாறு உள்ளார். மூத்த தேவியின் வலது புறம் மகள் மாந்தினியும், இடது புறம் மகன் மாந்தனும் எருமை தலையுடன் காணப்படுகின்றனர். வலப்புறத்தின் கீழ் அவளது வாகனம் கழுதையும், அதன் கீழ், சக்கரம் போன்ற அமைப்பும் உள்ளன. இந்த சிலையின் காலம் 8ம் நுாற்றாண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும்.மேலும், இக்கிராமத்தில் உள்ள குளக்கரை அருகே, 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து விஷ்ணு சிலைகள் இரண்டு, விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டில் இருக்கின்றன. பெருமாள் சிலைகள் இரண்டு, 5 அடி உயரத்தில் திறந்தவெளியில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.