தி.மலை அ.தி.மு.க., - மா.செ., மீது குற்றச்சாட்டு சீர்வரிசை தட்டுடன் சென்று இ.பி.எஸ்.,சிடம் புகார்
திருவண்ணாமலை, அ.தி.மு.க., கட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக, 2001-06 கால கட்டங்களில் இருந்தவர் ராமச்சந்திரன். ஜெ., மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்., அணியில் சேர்ந்து, 2023ல் இ.பி.எஸ்., அணியில் சேர்ந்தார். திருவண்ணாமலை மாவட்டம் அ.தி.மு.க., வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளை, தலா இரு தொகுதிகள் வீதம் நான்காக பிரித்து நான்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்துார் தொகுதிகள் அடங்கிய, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். தற்போது கட்சியில், 18க்கும் மேற்பட்ட அணியில், 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். நிர்வாகிகளை நியமித்தால், எதிர்த்து கேள்வி கேட்பார்கள் என்பதால், நிர்வாகிகளை நியமனம் செய்யாமல் உள்ளார். மேலும் இ.பி.எஸ்., ஆதரவு நிர்வாகிகளை நீக்கி விட்டு, ஓ.பி.எஸ்., அணியில் இருந்தபோது அவருடன் இருந்தவர்களை நிர்வாகியாக நியமித்து வருவதாக, இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர், ராமச்சந்திரனுக்கு எதிரான புகார் மனுவை கோவிலில் வைத்து அர்ச்சனை செய்தனர். மேள தாளத்துடன், சீர்வரிசை தட்டுடன் சென்று, சேலத்தில் இ.பி.எஸ்.,சை சந்தித்து மனு அளித்தனர்.இதுகுறித்து ராமச்சந்திரன் கூறுகையில் 'கட்சி நிர்வாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எனக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளனர். இதை பெரியதாக எடுத்து கொள்ளவேண்டியதில்லை' என்றார்.