அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
சேத்துப்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவரின் மகன்கள் யுவராஜ், 14, திசாந்த், 8. இருவரும், முறையே அரசு பள்ளியில் ஒன்பது, மூன்றாம் வகுப்பு படித்தனர். வீட்டின் அருகே ஏரியில் குளிக்க, நேற்று காலை, 9:00 மணிக்கு இருவரும் சென்றனர். ஏரியில் அதிகளவு நீர் உள்ள நிலையில், மண் அள்ளப்பட்டதால், பெரிய அளவிலான பள்ளங்கள் இருந்தன. ஆழமான பகுதிக்கு சென்றதில் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர். உடல்கள் மிதந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினர், சிறுவர்கள் உடல்களை மீட்டனர். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.