வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
செங்கம், செங்கம் அருகே, வாரிசு சான்றிதழ் வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்முடியனுார் வி.ஏ.ஓ., குணாநிதி, 42. அப்பகுதியை சேர்ந்தவர் பிரவீன், 45. இவர் வாரிசு சான்றிதழ் வாங்க, கடந்த ஒரு வாரத்திற்கு முன் விண்ணப்பித்தார். நேற்று முன்தினம் வி.ஏ.ஓ., குணாநிதியை சந்தித்து, சான்றிதழ் கேட்டபோது, அதற்கு அவர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து பிரவீன், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய பணத்தை, நேற்று மாலை, 3:00 மணியளவில், வி.ஏ.ஓ., குணாநிதியிடம், பிரவீன் கொடுத்துள்ளார். அதை அவர் பெற்றபோது, அவரை போலீசார் கைது செய்தனர்.