திருச்சி: திருச்சி ராம்ஜிநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த
சாந்தகுமார் மகன் சக்திவேல் (31). இவர், திருச்சி, 'கேர்' இன்ஜினியரிங்
கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். இவருக்கு சைலஜா என்ற மனைவியும்,
திவிஷா (2) என்ற மகளும் உள்ளனர். 2010ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி மகள்
திவிஷாவுக்கு மெடிக்கலில் மருந்து வாங்குவதுக்காக, தன் டூவீலரில் திருச்சி
நோக்கி சென்றார். கருமண்டபம் செக்போஸ்ட் அருகே செல்லும் போது, டவேரா காரில்
வந்த சிலர் அவரை கடத்தினர். காரில் தன்னை கடத்தியது ஆந்திரா போலீஸ்
என்றும், ராம்ஜிநகரை சேர்ந்த தனபால் என்பவர் கூறியதன் பேரில் தன்னை
கடத்தினர் என்றும் தெரிந்தது.பின் தொடர்ந்து வந்த ராம்ஜிநகர் எஸ்.ஐ., குழந்தைவேலு, 'வந்திருப்பது
ஆந்திரா போலீஸார். உன் மீது திருட்டு வழக்கு உள்ளது. 'கேஸ்' போடாமல்
இருக்க, 30 லட்சம் ரூபாய் கொடு. இல்லையெனில் உன்னை என்கவுன்டரில்
போட்டுத்தள்ளிவிடுவோம்' என்று மிரட்டினார். ஆனாலும் சக்திவேல் பணம்
தரவில்லை. இதையடுத்து, சக்திவேல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்துக்கு
கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, சக்திவேல் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டார். குடும்பத்தினர் புகாரின் பேரில், திருச்சி டி.ஐ.ஜி.,
அமல்ராஜ், மாவட்ட எஸ்.பி., கலியமூர்த்தி, மனித உரிமை கமிஷன் உத்தரவின்
பேரில் ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர்கள் கலைராஜ், சகாயம் ஆகியோர் விசாரித்து
அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையில் எஸ்.ஐ., குழந்தைவேலு, ராம்ஜிநகரை
சேர்ந்த தனபால் ஆகியோர் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என
தெரிவிக்கப்பட்டது. இதுவரை இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இச்சம்பவத்துக்கு பின், சக்திவேலுவின் விரிவுரையாளர் வேலை பறிபோனதோடு, எந்த
கல்லூரியிலும் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள தயங்குகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எஸ்.ஐ., குழந்தைவேலு, தனபால் ஆகியோர் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி டி.ஆர்.ஓ., பேச்சியம்மாளிடம் சக்திவேல்
நேற்று மனு அளித்தார்.இதுகுறித்து சக்திவேல் கூறியதாவது:என் அப்பா முதலில்
திருட்டு தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அந்த தொழிலை விட்டு திருந்தி
வாழ்ந்தார். நான் எந்த வம்புக்கும் போகாமல், பி.இ., படித்து, கல்லூரியில்
விரிவுரையாளராக சேர்ந்தேன். என் வளர்ச்சியை தாங்க முடியாத சிலர், என்னை
பழிவாங்க துடித்தனர். எங்கள் ஊரைச் சேர்ந்த தனபால், ராம்ஜிநகர் எஸ்.ஐ.,
குழந்தைவேலு உதவியுடன் என்னை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார்.
இதையடுத்தே ஆந்திரா போலீஸார் என்னை கடத்திச் சென்று, பொய் வழக்கு போட்டனர்.
இதனால், என் வாழ்க்கையே வீணாகிவிட்டது. ஆகையால், என்னை இந்த நிலைக்கு
ஆளாக்கிய எஸ்.ஐ., குழந்தைவேலு, தனபால் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.