உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஆவின் வாகன டிரைவர் போராட்டம் 4 மணி நேரம் பால் சப்ளை பாதிப்பு

ஆவின் வாகன டிரைவர் போராட்டம் 4 மணி நேரம் பால் சப்ளை பாதிப்பு

திருச்சி:திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து, தினமும், 1.10 லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டுகளில் அடைத்து, முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகாலை, 4:00 மணி முதல், வாடிக்கையாளர்களுக்கு பால் கிடைக்கும் வகையில், சப்ளை நடக்கிறது. இதற்காக, 40க்கும் மேற்பட்ட வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள், மாத வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.நேற்று அதிகாலையில், பால் சப்ளைக்கு வந்த வேன் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், 'இரண்டு மாதம் வாடகை பாக்கி இருக்கிறது. நிலுவை வாடகையை கொடுத்தால் தான், வாகனங்களில் பால் எடுத்துச் செல்வோம்' என்று கூறி திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இதனால், முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படாததால், நேற்று காலை, திருச்சி வாடிக்கையாளர்கள், ஆவின் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த முகவர்கள் சிலர், நேரடியாக குளிரூட்டும் நிலையத்துக்கு வந்து, சொந்த வாகனங்களில் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனர்.போராட்டம் பற்றி அறிந்த ஆவின் நிர்வாக அதிகாரிகள், ஸ்டிரைக்கில்ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, 'பால் சப்ளை செய்யும் ஒவ்வொரு வேனுக்கும், குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி உள்ளது. இதுவரை, ஐந்து முறை போராட்டம் நடத்தியும், நிலுவையில் உள்ள வாடகை வழங்கப்படவில்லை. அதனால் தான், போராட்டத்தில் ஈடுபட்டோம்' என, வாகன உரிமையாளர்களும், டிரைவர்களும் தெரிவித்தனர்.'நிலுவையில் உள்ள வாடகை, நாளைக்குள் முழுமையாக வழங்கப்படும்' என்று கூறிய ஆவின் அதிகாரிகள், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். அதன் பின், காலை 8:00 மணிக்கு மேல், பால் பாக்கெட்டுகளை சப்ளைக்கு எடுத்துச் சென்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ