எஸ்.பி., குறித்து அவதுாறு கண்டுகொள்ளாத அமைப்புகள் திருச்சி போலீசில் அதிருப்தி
திருச்சி: திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருப்பவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக உள்ளார். எஸ்.பி., வருண்குமாருக்கும், நாம் தமிழர்என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியினர், அவரையும், அவரதுமனைவி வந்திதா பாண்டே மற்றும் குடும்பத்தினரையும் அவதுாறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இதுகுறித்து எஸ்.பி., அளித்த புகாரில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த, 51 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, நால்வரை கைது செய்துள்ளனர். இதில், குறிப்பாக புதுக்கோட்டை எஸ்.பி.,வந்திதா பாண்டேவை, தரக்குறைவான வார்த்தைகளால் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளனர். இதனால், இருவரும் எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறி உள்ளனர்.பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக, பிரபலமான பெண்களுக்கு ஏதும் பிரச்னை என்றால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் பொதுவான மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவர். ஆனால், மாவட்ட எஸ்.பி.,யாக இருக்கும் பெண்ணை, கடுமையான விமர்சனங்கள் செய்தவர்களை கண்டித்து, இதுவரை எந்த மகளிர் அமைப்பும் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை.அவருக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சி தலைவரும் குரல் கொடுக்கவில்லை.முன்னாள் போலீஸ் அதிகாரிகள் யாரும் ஆதரவுக்கரம் நீட்டாமல் உள்ளனர். இது, போலீசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.