| ADDED : ஜூன் 18, 2024 12:14 AM
மண்ணச்சநல்லுார் : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அடுத்துள்ள சிறுகாம்பூரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மனைவி சுமதி, 42. சலவை தொழிலாளியான ரவிகுமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் வீட்டிலேயே உள்ளார். இதனால் அவரின் மனைவி, திருச்சியில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது, அதே பகுதியில் உள்ள வாழ்மால் பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 30, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். அந்த பெண்ணுக்கும், மாரிமுத்துக்கும் உள்ள கள்ளத்தொடர்பு, உறவினர்களுக்கு தெரிய வந்தது. திடீரென அவருடன் பேச்சை நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, நேற்று காலை, சிறுகாம்பூர் பஸ் ஸ்டாப்பில் சுமதி வரும் வரை காத்திருந்தார். அவர் வந்த போது அந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் சுமதியின் வயிற்றில் குத்தினார். அவர் தப்பித்து ஓடியும், விரட்டிச் சென்று சரமாரியாக குத்தினார்.படுகாயம் அடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் மாரிமுத்துவை பிடித்து, தர்ம அடி கொடுத்து, வாத்தலை போலீசில் ஒப்படைத்தனர்.