தப்புக்கணக்கு எழுதிய இன்ஸ்., துாக்கியடிப்பு
திருச்சி : திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள முக்கொம்பு பகுதியில் காரில் கடத்தப்பட்ட, 152 கிலோ குட்கா புகையிலை பொருட்களை, எஸ்.பி., தனிப்படை போலீசார், சில நாட்களுக்கு முன் பறிமுதல் செய்தனர். இருவர் கைது செய்யப்பட்டு, 1.96 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.குட்கா, பணம் மற்றும் கைதானவர்கள் ஜீயபுரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கு பதிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், 1 லட்சம் ரூபாயை குறைத்து, 96,000 ரூபாய் மட்டும் பறிமுதல் செய்ததாக வழக்கு பதிவு செய்தார்.இதுகுறித்து தகவலறிந்த திருச்சி எஸ்.பி., வருண்குமார், விசாரணை நடத்தினர். விசாரணையில், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சில போலீசாரின் உதவியோடு, 1 லட்சம் ரூபாயை மறைத்து வழக்கு பதிந்தது தெரிந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரனை, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை; தனிப்படை போலீசார் சரவணன், சத்தியமூர்த்தி, ரகுபதி, அருள் முருகன் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, நேற்று காலை, எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.