திருச்சி:திருச்சியில், அரசின் கொள்முதல் நிலையங்களில், அடிப்படை வசதி இல்லாததால், நெல் மணிகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கோடை காலத்தில், திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில், குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதன் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் குறுவை நெல் கொள்முதலுக்காக, உப்பிலியபுரம், வைரி செட்டிபாளையம், கோட்டப்பாளையம், பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி, ஏரகுடி, சிறு நாவலுார், வெங்கட்டம்மாள் சமுத்திரம், வெங்கடாசலபுரம் உட்பட 13 இடங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில், மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை, என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, கோட்டப்பாளையம் நடுகளம் பகுதியில், திறந்த வெளியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதால், விவசாயிகள் தார்ப்பாய் விரித்து, அதில் நெல்லை குவியலாக கொட்டி வைத்து உள்ளனர்.தற்போது, சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால், நெல் மணிகள் நனைந்து, சேதம் அடைகின்றன. மழையில் நனைந்த நெல் மணிகளை உலர்த்தக் கூட களம் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கொள்முதல் நிலையங்களில், நெல் உலர்த்த களம், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.