உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி திருமணம் நிச்சயமானவர் கொடூர கொலை

அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி திருமணம் நிச்சயமானவர் கொடூர கொலை

திருச்சி:திருச்சி, அரியமங்கலம் அருகே திடீர் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 27. இவரது தந்தை கேபிள் சேகர் அ.தி.மு.க.,வில் பகுதி செயலராக இருந்தவர். தாய் கயல்விழி, திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலராக இருமுறை இருந்தவர். சேகரை, 2011ல் அவரது அண்ணன் மகன் சிலம்பரசன் உள்ளிட்டோர், சொத்து பிரச்னையில் கொலை செய்தனர். சிலம்பரசன், அவரது தாய், சகோதரர் தங்கமணி உள்ளிட்ட, 11 பேர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், தந்தையை கொலை செய்த சிலம்பரசனை பழி வாங்க, 2021ம் ஆண்டு, முத்துக்குமார் உள்ளிட்ட, நால்வர் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான முத்துக்குமார் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று காலை, 11 மணிக்கு, தஞ்சை பைபாஸ் சாலையில் அரியமங்கலத்தில் நின்றிருந்த முத்துக்குமாரை, சிலம்பரசன் சகோதரர் லோகநாதன், 25 மற்றும் இருவர், அரிவாளுடன் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய முத்துக்குமாரை, விரட்டி சென்று, லோகநாதன் அரிவாளால் தலையில் வெட்டினார். சாய்ந்த முத்துக்குமாரின் மூளை சிதறும் அளவுக்கு, ஆவேசமாக அவரை வெட்டிய லோகநாதன், அங்கிருந்து நண்பர்களுடன் தப்பினார். இதுகுறித்து, அரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். கொலை செய்த லோகநாதனும், அவரது நண்பரும், பொன்மலை போலீசில் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.கொலையான முத்துக்குமாருக்கு வரும் மே, 23ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்து, நேற்று காலை தான், அதற்காக பத்திரிக்கை அச்சிட்டு வாங்கி வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ