திருச்சி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி,:திருச்சி மாநகரில் உள்ள கேம்பியன் பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளி மற்றும் கல்லுாரி, செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் பள்ளி கே.கே.நகர் ஆச்சார்யா பள்ளி, திருவெறும்பூர் மான்ட்போர்ட் பள்ளி என, ஒன்பது பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லுாரிகளுக்கு இ - மெயில் மூலம் மிரட்டல் விடப்பட்டிருந்தது.அந்த கல்வி நிறுவனங்களின் இ- - மெயில் முகவரிக்கு, ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் நேற்று காலை வந்த இ-மெயிலில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட போலீசின், வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினர் மற்றும் போலீசார், மிரட்டல் வந்த பள்ளிகள், கல்லுாரிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.காலாண்டு விடுமுறை என்பதால், பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. ஆனால், கல்லுாரிகளில் மாணவர்கள் இருந்தனர். பல மணிநேரம் நடந்த சோதனைக்கு பின் எங்கும் வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பதும், இ - மெயில் தகவல் புரளி என்பதும் தெரியவந்தது.இதுகுறித்து கோட்டை, கே.கே.நகர், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.