உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / குளித்தலை கோர்ட் தள்ளுபடி தி.மு.க., எம்.எல்.ஏ., போலீஸ் காவல் மனு

குளித்தலை கோர்ட் தள்ளுபடி தி.மு.க., எம்.எல்.ஏ., போலீஸ் காவல் மனு

குளித்தலை: தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமியை போலீஸ் காவலுக்கு அனுப்ப போடப்பட்ட மனுவை குளித்தலை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கரூர் மாயனூர் காவிரியாற்று பகுதிகளில் விதிமுறை மீறி மணல் அள்ளியதாக அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமி உள்பட ஏழு பேர் மீது மாயனூர் வி.ஏ.ஓ., நீலமேகம் கடந்த 14ம் தேதி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 19ம் தேதி மதியம் 2.45 மணிக்கு மாயனூர் கே.சி.பி., பேக்கேஜ் கம்பெனியில் இருந்த வீட்டுக்கு புறப்பட்ட எம்.எல்.ஏ., பழனிசாமியை போலீஸார் கைது செய்து, குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சுந்தரேசன், கிரிராஜ், ரவிராஜா, ராஜா, சசிகுமார், குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, போலீஸார் குளித்தலை கோர்ட்டில் மனு செய்தனர். இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பழனிசாமியை நேற்று காலை 11.55 மணிக்கு குளித்தலை கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து வந்தனர். சிறிது நேரத்து பிறகு கோர்ட்டில் பழனிசாமியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, பழனிசாமியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மூன்று நாட்கள் அனுமதி வழங்கும்படி போலீஸார் தரப்பில் கோரப்பட்டது. எம்.எல்.ஏ., பழனிசாமி தரப்பில் ஆஜரான தி.மு.க., மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், ''ஆற்றுப்பகுதிகளில் விதிமுறை மீறி மணல் அள்ளப்பட்டதாக கனிமவளத்துறை உயர்அதிகாரிகள்தான் புகார் கொடுக்க வேண்டும். வி.ஏ.ஓ., புகார் கொடுக்க முடியாது. எனவே, பழனிசாமியை போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது,'' என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தனசேகரன், 'எம்.எல்.ஏ., பழனிசாமியை போலீஸ் காவலில் அனுப்பக்கோரி, போலீஸார் தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை. இதனால் பழனிசாமியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க முடியாது' என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ., பழனிசாமியை மீண்டும் போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை