உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மேயர் பதவிக்கு போட்டா போட்டி தே.மு.தி.க.,வில் பெண்கள் ஆர்வம்

மேயர் பதவிக்கு போட்டா போட்டி தே.மு.தி.க.,வில் பெண்கள் ஆர்வம்

திருச்சி: திருச்சி மாநகராட்சித் தேர்தலில், கவுன்சிலர் மற்றும் மேயராக போட்டியிட தே.மு.தி.க.,வில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகள் மற்றும் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்பும் தே.மு.தி.க.,வினருக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன. மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய 15 ஆயிரம் ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கான விருப்ப மனுவுக்கு 5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், மாநில வர்த்தக அணித்துணைச் செயலாளர் விஜயகுமார், கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுகின்றனர். நேற்று வரை கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 180 பேரும், மேயர் பதவிக்கு போட்டியிட 11 பேரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 'பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்' என்ற கொள்கை உடைய கட்சித் தலைவர் விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலிலாவது அதிக இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவார் என்று மகளிரணியினர் எதிர்பார்க்கின்றனர். அதனால், கவுன்சிலர் பதவிகளை குறிவைத்து அதிகளவில் பெண்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், மாநில வர்த்தக அணித்துணைச் செயலாளர் விஜயகுமார், தெற்கு மாவட்டச் செயலாளர் நடராஜன், கவுன்சிலர் ஜெரால்டு உள்ளிட்ட 10 பேருடன், மேயர் பதவிக்கு மகளிரணிச் செயலாளர் வக்கீல் சித்ராவும் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். செப்., 18ம் தேதி வரை விருப்ப மனு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதால், தே.மு.தி.க.,வில் மேலும் பல பெண்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை