திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்சி மேற்கு தொகுதிக்கு வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கடலூர் சிறையில் உள்ள நேருவுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ய, முன்னாள் அமைச்சர் வேலு தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், எம்.பி.,க்கள் சிவா, செல்வகணபதி, விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேகரன், பரணிகுமார், மாநில நிர்வாகி செல்வேந்திரன் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாக நேருவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலு தலைமையிலான தி.மு.க., தேர்தல் பணிக்குழுவினர், நேற்று காலை ஏழு மணிமுதல் மதியம் வரை, மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.உறையூர் பகுதியில் உள்ள அரவனூர், சந்தோஷ்நகர், மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, மேல பாண்டமங்கலம், வெள்ளாளத்தெரு, லிங்கம் நகர், விஸ்வாஸ் நகர் உள்பட பல பகுதிகளில் தி.மு.க.,வினர் நேற்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒவ்வொரு வீடாக சென்ற அவர்கள், நேருவுக்கு ஓட்டு கேட்டு அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை விநியோகித்து ஓட்டு சேகரித்தனர். தேர்தல் பணிக்குழுவினருடன், உறையூர் பகுதி செயலாளர் கண்ணன், கோட்டத்தலைவர்கள் அறிவுடை நம்பி, பாலமுருகன், கிராப்பட்டி செல்வம், உறையூர் பகுதி நிர்வாகிகள் ராமலிங்கம், மனோகர், சுப்பிரமணி ஆகியோர் உடன் சென்று, அந்த பகுதி மக்களிடம் ஓட்டு சேகரித்தனர்.