உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தாயை காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் தாக்கி பலி

தாயை காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் தாக்கி பலி

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சியில் மின்சாரம் தாக்கிய தாயை காப்பாற்ற முயன்ற மகன் மின்சாரம் தாக்கி பலியானார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வாசுகி(65). இவரது மகன் முத்துக்குமரன்(25). இவர் சேலத்திலுள்ள மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்தார். முத்துக்குமரன் தாயை பார்த்துச் செல்வதற்காக துவரங்குறிச்சி வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இரண்டு மணியளவில் வீட்டினுள் இருந்த பல்பு சுவிட்சை வாசுகி போட முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். தாய் அலறல் சத்தத்தை கேட்ட முத்துக்குமரன், தாயை காப்பாற்றுவதற்காக, மெயின் சுவிட்சை ஆஃப் செய்யச் சென்றபோது, மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமரனும், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இதில் முத்துக்குமரன் இறந்துவிட்டார். வாசுகி துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி மற்றும் போலீஸார், முத்துக்குமரனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி