| ADDED : ஆக 22, 2011 02:23 AM
திருச்சி: 'திருச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது' என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் திருச்சி கிளை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் திருச்சி கிளை செயற்குழுக் கூட்டம் விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், சங்கத்தின் தலைவர் டாக்டர் செல்வபாண்டியன், செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் செல்வராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் ஞானவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை போட்டியின்றி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு டாக்டர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ மேற்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ள மணப்பாறையில், பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தை அமைக்கவேண்டும்.பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறைகளில் மேலும் இரண்டு யூனிட்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் மேலும் பல பட்ட மேற்படிப்பு பிரிவுகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று மருத்துவ கல்வித்துறை இயக்குனரை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.