திருச்சியில் வெள்ளம்
திருச்சி: திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதுார் அன்புநகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீடுகளில் நீர் புகுந்தது. புதுக்கோட்டை சாலை, ஜெயலலிதா நகரில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.மேலும், மன்னார்புரம் கிருஷ்ணமூர்த்தி நகர், சிம்கோ மீட்டர், தொண்டைமான் காலனி, உறையூர் லிங்கம் நகர், மாநகராட்சி, 62வது வார்டில் உள்ள ஹெல்த் காலனி, விமான நிலையம் பகுதியில் உள்ள கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட இடங்களில், வீதிகளில் வெள்ளம் புகுந்தது.கிருஷ்ணமூர்த்தி நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள பெரிய குளமான மாவடி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருச்சி புறநகரில் திருவெறும்பூர் அண்ணாநகர், நவல்பட்டு, துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. துறையூர், அந்தநல்லுார், கம்பரசம்பேட்டை, மணப்பாறை பகுதிகளில் பல இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.