முன்னாள் தாசில்தார் கொலை: தந்தை, 2 மகன்கள் கைது
திருச்சி: திருச்சி அருகே கோவில் நிலம் குத்தகை பிரச்னையில், ஓய்வு பெற்ற தாசில்தாரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த வழக்கில், கோவில் மருளாளி, அவரது இரு மகன்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனுாரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணி, 62. இவர், அம்மன் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இது தொடர்பாக, அந்த கோவில் மருளாளி லெக்கன், 50, என்பவருடன் பிரச்னை ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை, வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணி, மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சோமரசம்பேட்டை போலீசார் விசாரணையில், கோவில் மருளாளி லெக்கன், அவரது மகன்கள் தமிழ்ச்செல்வன், 25, சூர்யா, 23, ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.