ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து: பெண் பயணி பலி
திருச்சி:துவரங்குறிச்சி அருகே ஆம்னி பஸ் மின் கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். டிரைவர் உட்பட 15 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நோக்கி, செயின்ட் பால் என்ற தனியார் ஆம்னி பஸ், இரண்டு டிரைவர், 39 பயணியர் என, 41 பேருடன் புறப்பட்டது.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அருகே யாகபுரம் பகுதியில் மேம்பால சர்வீஸ் சாலையில், நள்ளிரவு 1:15 மணிஅளவில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த தடுப்பு கட்டை மற்றும் மின் கம்பத்தில் பஸ் மோதியது. இதில், 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ, அதே நேரம் பஸ் தீப்பற்றி எரிய துவங்கியது. பஸ்சில் இருந்தவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அக்கம்பக்கம் வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து, பஸ்சில் இருந்தவர்களை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணியரை, துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.பஸ் முழுதும் எரிந்து சேதமானது. விபத்தில், டிரைவர்கள், பயணியர் உட்பட, 15 பேர் காயமடைந்தனர். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம், நெடுவிளையை சேர்ந்த புஷ்பம், 60, என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்தால், திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.