சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பீதி
திருச்சி:ராமேஸ்வரத்தில் இருந்து, திருச்சி வழியாக நேற்று அதிகாலை சென்னை சென்று கொண்டிருந்த, சேது எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 2:30 மணிக்கு, திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து, சென்னை புறப்பட்ட போது, திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து சிறிது துாரத்தில், ரயில் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி கழன்று தனியே நின்றது. அதை தொடர்ந்து இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளும் நின்று விட்டன. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், இது நிகழ்ந்ததால், உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கழன்ற பெட்டிகளை, மீண்டும் இணைத்து சீரமைத்தனர்.இதனால், திருச்சியில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் ரயில், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பெட்டிகள் கழன்றதால், பயணியர் பீதியடைந்தனர். நடுவழியில் இதுபோல நடந்திருந்தால் என்னவாகும் என அச்சம் தெரிவித்தனர்.