| ADDED : ஆக 23, 2011 01:13 AM
திருச்சி: திருச்சி ஏர்போர்ட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொன்மலை போலீஸ் ஏ.சி., சீனிவாசன் தலைமையில் போலீஸார் ஏர்போர்ட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜெ.கே.நகரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதன்பின், வரிடம் போலீஸ் முறைப்படி விசாரித்ததில், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை ஒப்புக் கொண்டுள்ளார். ஏர்போர்ட் காமராஜ் நகரைச் சேர்ந்த சகாயராஜ் (26) என்ற அந்த நபர் வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர். * ஆனால், ரகசிய தகவலின் பேரில் சகாயராஜ் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி, அங்கிருந்து கிலோக்கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும், வழக்கு பதிவு செய்யும் போது வெறும் 250 கிராம் கஞ்சா மட்டும் பிடிபட்டதாகவும் கணக்கு கட்டியுள்ளதாக போலீஸார் மத்தியிலேயே பரபரப்பாக பேசப்படுகிறது.