உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பஸ்ஸில் வந்த மூதாட்டியிடம் ஒன்பதரை பவுன் செயின் பறிப்பு

பஸ்ஸில் வந்த மூதாட்டியிடம் ஒன்பதரை பவுன் செயின் பறிப்பு

மணப்பாறை: மணப்பாறை அருகே பஸ்ஸில் வந்த மூதாட்டி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் செயினை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரைச் சேர்ந்தவர் மூர்த்தி (36). இவர் தனது மனைவி சசிகலா, மாமியார் முத்துலட்சுமி (75), அண்ணி மற்றும் குழந்தைகளுடன் நேற்று காலை மணப்பாறை அருகேயுள்ள நல்லாண்டவர் கோவிலுக்கு, குழந்தைகளுக்கு மொட்டையடித்து சாமி கும்பிட வந்துள்ளார். திண்டுக்கல்லிருந்து பஸ்ஸில் வந்த அவர், மணப்பாறையில் இறங்கி, அங்கிருந்து குளித்தலை செல்லும் பஸ்ஸில் ஆண்டவர் கோவில் ஸ்டாப்பில் இறங்கியுள்ளார். பஸ்ஸிலிருந்து இறங்கிய சிறிது நேரத்தில் மூர்த்தியின் மாமியார் முத்துலட்சுமி தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்பதரை பவுன் செயின் திருட்டு போயிருப்பதை தெரிந்து கொள்கிறார். உடனே அவர் மயக்கமடைந்து விட்டார்.பஸ்ஸில் ஏதும் விழுந்திருக்குமா? என்று பார்க்க மூர்த்தி முயன்றபோது, பஸ் நீண்டதூரம் சென்று விட்டது. இதுகுறித்து அவர் மணப்பாறை போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன், எஸ்.எஸ்.ஐ., ஏசையன் ஆகியோர் ஒன்பதரை பவுன் செயினை திருடிய நபரை தேடி வருகின்றனர்.மணப்பாறையில் வாரந்தோறும் புதன்கிழமை மாட்டுச்சந்தை நடக்கும் என்பதால், பஸ்கள் அனைத்தும் கும்பலாகவே இருக்கும். அதை பயன்படுத்தி சிலர் திருட்டு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக மணப்பாறையில் புதன்கிழமை பஸ்ஸிலும், கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களிலும் நகையை திருடுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதை போலீஸார் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ