| ADDED : ஜூலை 24, 2011 01:23 AM
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே புதுக்குடியில் 15 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியல் செய்தனர்.
மருங்காபுரி யூனியன், வளநாடு பஞ்சாயத்திற்கு உட்பட்டது புதுக்குடி ஆகும். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீருக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும், வளநாட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதிலிருந்து பைப்லைன் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 15 நாளாக வளநாடு ஆழ்குழாய் கிணற்றிலிருந்த மின்மோட்டார் பழுதானதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே வரும் காவிரி நீரும் கடந்த சில நாட்களாக வரவில்லை.
புதுக்குடியை சேர்ந்த மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அருகிலுள்ள பாசன கிணற்றுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து வளநாடு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கூறியும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மணப்பாறையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், புதுக்குடி பஸ் ஸ்டாப்பில் நேற்று காலை 75 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். வளநாடு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், வீரையன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்த மக்களிடம் பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து புதுக்குடியில் பழுதாகியுள்ள கை பம்பை உடனடியாக சரிசெய்வது என்றும், பழுதாகியுள்ள மின்மோட்டாரை உடனடியாக சரி செய்து, தினந்தோறும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.