துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே வளநாட்டில் விநாயகர் சதூர்த்தியை
முன்னிட்டு, விநாயகர் எழுச்சி ஊர்வலம் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு
துவங்கி மூன்றரை மணிநேரம் நடந்தது.திருச்சி மாவட்டம் வளநாடு பொதுமக்கள்
சார்பில் விநாயகர் சிலை வைத்து, பூஜைகள் செய்து, ஊர்வலம் செய்வதற்கு
போலீஸாரிடம் அனுமதி கேட்டு, மனு கொடுக்கப்பட்டது. அதே ஊரை சேர்ந்த
முஸ்லீம்கள், விநாயகர் ஊர்வலம் எங்கள் தெருக்கள் வழியாக சென்றால்,
மதரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதற்கு போலீஸார் அனுமதி
வழங்க கூடாது என கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டம்
ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயிடம், இந்த ஊர்வலத்திற்கு அனுமதி
வழங்கக்கூடாது என முஸ்லீம் தரப்பினர் நேரில் மனு கொடுத்தனர். இதைத்
தொடர்ந்து திருச்சி எஸ்.பி., லலிதா லெட்சுமி வளநாட்டிற்கு வந்து ஊர்வலம்
செல்லும் பாதையை பார்வையிட்டு சென்றார்.பின்னர் மணப்பாறை தாசில்தார்
அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், காலை 11 மணிக்குள்
ஊர்வலத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் போலீஸார் அனுமதி
அளித்தனர்.வளநாடு சந்தைபேட்டையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, பூஜைகள்
செய்து, நேற்று முன்தினம் காலை எட்டரை மணியளவில், வாணவேடிக்கை, கேரள செண்டை
மேளத்துடன், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக
புறப்பட்டு கடைவீதி, சிவன் கோவில் தெரு, அம்பலகாரர் தெரு, கோனார் தெரு
வழியாக சென்று, செங்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.இதில், இந்து
முன்னணி மாநில துணைத்தலைவர் பாண்டியன், இந்து முன்னணி நிர்வாகிகள்
தண்டபாணி, கண்ணன், முத்துக்குமார், சுப்பிரமணி, ஆர்.எஸ்.எஸ்., மருங்காபுரி
ஒன்றிய செயலாளர் ஸ்ரீராம், வளநாடு வீரன், ராஜு உட்பட ஆயிரக்கணக்கானோர்
பங்கேற்றனர்.மணப்பாறை டி.எஸ்.பி., தொல்காப்பியன், துவரங்குறிச்சி போலீஸ்
இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, எஸ்.ஐ., பால்ராஜ், எஸ்.எஸ்.ஐ.,கள், வீரையன்,
பெருமாள் உள்ளிட்ட 100 போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த ஊர்வலம் முடியும் வரை வளநாடு கடைவீதியிலுள்ள முஸ்லீம் கடைகள்
அனைத்தும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல்
கோவில்பட்டி, ஊனையூர், தேனூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள்
வைக்கப்பட்டு, பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம்
செய்யப்பட்டது.