டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வரும்?
திருச்சி:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு உள்ளது. சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் இங்கு அனுப்பப்படுகிறது.இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம், தஞ்சை, திருச்சி, நாகை, சிவகங்கை உள்ளிட்ட, 10 மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான பெட்ரோல் பங்க்குகளுக்கு, 300க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில், வாழவந்தான்கோட்டையில் உள்ள சேமிப்பு கிடங்கின் டேங்கர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், நேற்று காலை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கிடங்கில் இருந்து லோடு எடுக்க, ஐ.ஓ.சி.எல்., அடையாள அட்டையை வைத்துள்ள அனைத்து லாரிகளையும் அனுமதிக்க வேண்டும்.டீலர்களின் வண்டிகள் காலையில் லோடு பிடிக்கவும், மதிய உணவு இடைவெளி இல்லாமல் லோடு பிடிக்கவும் அனுமதிக்க வேண்டும். லோடு இறக்காத பங்க்குக்கு லோடு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.லாரி ஓட்டுனர்கள் முதல் நாள் மது அருந்தி இருப்பது கருவி மூலம் கண்டறியப்பட்டால், மூன்று நாள் பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். மொழி தெரியாதவர்கள் பணியில் இருப்பதால், டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்களை அவமரியாதை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.டேங்கர் லாரிகள் போராட்டத்தால், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், டிரைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.