அரசு மாணவர் விடுதி உணவில் புழு; மாணவர்கள் நள்ளிரவில் மறியல்
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு விடுதி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். விடுதியில் வழங்கப்படும் உணவு எப்போதுமே தரமற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தது. இதுகுறித்து மாணவர்கள் விடுதி பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, சரியான பதிலை அவர் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், உருமு தனலட்சுமி கல்லுாரி அருகே திருச்சி - தஞ்சை சாலையில் இரவு, 11:00 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மகேந்திரன் ஆகியோர், மாணவர்களுடன் பேச்சு நடத்தி, சமரசம் செய்தனர்.இதையடுத்து, நள்ளிரவு, 1:00 மணிக்கு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியல் போராட்டத்தால் திருச்சி - தஞ்சை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.