ஆன்லைன் விளையாட்டில் நஷ்டம் ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள இடையப்பட்டியை சேர்ந்தவர் கஸ்துாரி ராஜா, 23. கல்லுாரி படிப்பை முடித்த இவர், தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அந்த வேலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் நின்று விட்டார். வீட்டில் இருந்த கஸ்துாரி ராஜா, ஆன்லைனில் வர்த்தக விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதில், லட்சக்கணக்கில் பணம் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்கள், உறவினர்கள் சிலருக்கு வாட்ஸாப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். வர்த்தக விளையாட்டில் பணம் இழந்ததால், தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். பின், தன் காரில் வையம்பட்டி அருகே தண்டல்காரனுாருக்கு சென்று, காரை நிறுத்தி விட்டு ரயில்வே பாலத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.