மேல்பட்டி : வேலுார் மாவட்டம், மேல்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2013ல் முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் இறந்தார். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அப்போது அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்.எஸ்.ஐ., இன்பரசன், ஏட்டு உமாசந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு, வேலுார் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் நேற்று, இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்.எஸ்.ஐ., இன்பரசன், ஏட்டு உமாசந்திரன் ஆகியோருக்கு தலா, 7 ஆண்டு சிறை, இன்ஸ்பெக்டர் முரளிதரன், ஏட்டு உமா சந்திரனுக்கு தலா, 1.70 லட்சம் அபராதம், எஸ்.எஸ்.ஐ., இன்பரசனுக்கு, 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் முரளிதரன், தற்போது வேலுார் கலால் பிரிவிலும், ஏட்டு உமாசந்திரன் பரதராமி போலீஸ் ஸ்டேஷனிலும் பணியில் உள்ளனர். எஸ்.எஸ்.ஐ., இன்பரசன் ஓய்வு பெற்று விட்டார்.