பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
வேலுார்:வேலுார் அரசு பென்லேண்ட் மருத்துவமனையில், மருந்தாளுனர் இல்லாததால், நோயாளிகள் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேலுார் பென்லேண்ட் பழைய அரசு மருத்துவ மனையில் புற, உள் நோயாளிகள் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை அடுத்து, அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஏராளமான நோயாளிகள் குவிந்தனர். டாக்டரை பார்த்துவிட்டு, நோயாளிகள் மருந்தகம் சென்ற போது, மருந்தகம் திறக்கப்படாததால் ஏராளமான நோயாளிகள் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பழைய அரசு மருத்துவமனையில், மருந்தாளுனர்கள் மூவர் பணியில் இருப்பது வழக்கம். நேற்று ஒரு மருந்தாளுனர் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்வதை முன்னிட்டு அங்கு சென்றார். மற்றொரு மருந்தாளுனர் விடுமுறையில் உள்ளார். ஒருவர் மட்டும் தாமதமாக பணிக்கு வந்தார். ஆத்திரமடைந்த நோயாளிகள், மருந்தகத்தில் இருந்த மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பணியில் இருந்த இரு நர்சுகளை வரவழைத்து மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கால் வலிக்க காத்திருந்த நோயாளிகளுக்குள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.