ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க அனுமதி
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து குறைந்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் குளிக்க அனுமதி வழங்கி உள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த, தென் மேற்கு பருவ மழையால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 16,000 கன அடியாக குறைந்தது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து சீரானதால், ஆறு நாட்களுக்கு பின் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவால், அங்குள்ள மெயின்பால்ஸ் வெறிச்சோடி காணப்பட்டது.