ப.வேலுார் : பரமத்தி டவுன் பஞ்சாயத்து, 6வது வார்டு பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு, கவுன்சிலர் கீதா தலைமையில், செயல் அலுவலர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:பரமத்தி நகர பகுதியில் இருந்து பைபாஸ் சாலை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற பகுதி, சார் நிலை கருவூலம், வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை ஆகியவை, 6வது வார்டு பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலை முழுதும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.மேலும், சாக்கடை, பொது கழிப்பிடம் முறையாக பராமரிக்காமல் சேதமடைந்து, துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதன் காரணமாக, சாலையோரம், பொது இடம், திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டவுன் பஞ்., நிர்வாகம், 6வது வார்டு பகுதிக்கு உடனடியாக சாலை, சாக்கடை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, செயல் அலுவலர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, ''பரமத்தியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமுமின்றி, மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 6வது வார்டு கவுன்சிலர், பொதுமக்கள் அளித்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.