சப் - இன்ஸ்பெக்டர் மனைவிக்கு ரூ.59.70 லட்சம் இழப்பீடு
வேலுார்:விபத்தில் உயிரிழந்த சப் - இன்ஸ்பெக்டர் மனைவிக்கு, 59.70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலுார் மாவட்டம், மேல்மாயிலை சேர்ந்தவர் கார்த்திகேயன், 51; சப் - இன்ஸ்பெக்டர். இவர், 2021 செப்., வீட்டிலிருந்து, மேல்பட்டி காவல் நிலையத்துக்கு, டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். குடியாத்தம் - காட்பாடி சாலையில், சென்னாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த லோடு ஆட்டோ கார்த்திகேயன் டூ - வீலரில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தன் கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி கார்த்திகேயனின் மனைவி விஜயலட்சுமி, வேலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி சாண்டில்யன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரரின் கணவர் இறப்புக்கு ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 59.70 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன் சோழமண்டலம் எம்.எஸ்., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.