விலங்குகளை வேட்டையாடிய இருவருக்கு வலை
காட்பாடி: புனுகு பூனை, முள்ளம்பன்றியை வேட்டையாடிய மர்ம கும்பலை, காட்பாடி வனத்துறையினர் தேடி வருகின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடி வன சரகத்திற்கு உட்பட்ட சிங்காரெட்டியூர் ஈசன் மலை காப்பு காட்டு பகுதியில், மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வன அலுவலர் கந்தசாமிக்கு தகவல் வந்தது. வன காவலர்கள் நேற்று (அக்.,31) இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 2 பேர் நாட்டு துப்பாக்கிகளுடன் அழியும் தருவாயில் உள்ள முள்ளம்பன்றி, புனுகு பூனை ஆகியவற்றை வேட்டையாடி, சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற போது, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களிடம் இருந்து, ஒரு நாட்டுத்துப்பாக்கி, 2 டூவீலர்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட முள்ளம்பன்றி, புனுகு பூனையை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். வனத்துறையினர் வழக்கு பதிந்து, தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.