வேலுார் கோட்டை அகழி கரை சுவர் இடிந்து சேதம்
வேலுார்: மழையால், வேலுார் கோட்டை அகழியின் மேற்கு கரை சுவர், 10 மீ., அளவுக்கு இடிந்து விழுந்தது. அந்த இடத்தை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விஜய நகர பேரரசு காலத்தில், 15ம் நுாற்றாண்டில், 133 ஏக்கரில் கட்டப்பட்ட வேலுார் கற்கோட்டையை சுற்றி, மூன்று கி.மீ.,க்கு, 20 முதல், 30 அடி ஆழம் வரை அகழி உள்ளது. அதில் அதிகளவு நீர் வந் தால் வெளியேற்றுவதற்கான கட்டமைப்பை சீரமைக்க, வேலுார் சீர்மிகு நகர திட்டத்தில், சில ஆண்டுக்கு முன், 33.20 கோடி ரூபாய் மதிப்பில் அகழி துார்வாரப்பட்டு, அதன் கரை சுவர்கள் கட்டப்பட்டன. தற்போது இரு வாரங்களாக தொடர் மழையால், அகழி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதில் கோட்டை மேற்கு பகுதியில், வேலுார் டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரே, 10 மீ., நீளத்துக்கு அகழியின் கரையில் கட்டப்பட்ட கருங்கற்களால் ஆன கரைச்சுவர்கள், நேற்று சரிந்து விழுந்தன. இதை, சென்னை வட்ட தொல்லியல் துறை உதவி பொறியாளர் ஈஸ்வரன், கோட்டையின் பராமரிப்பு அலுவலர் கோகுல் ஆய்வு செய்தனர். அங்கு மக்கள் யாரும் செல்லாதபடி, எச்சரிக்கை பலகை, கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 'தண்ணீர் அதிகம் உள்ளதால், சீரமைக்க முடியாத நிலை உள்ளதால், மழைக்காலம் முடிந்த பின் சீரமைக் கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.