கொடிய விஷபாம்பு கடித்ததா? மாமியார் பலி; மருமகள் சீரீயஸ்
வேலுார்:உடல் முழுதும் விஷம் பரவி, மாமியார் இறந்த நிலையில், மருமகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுவதால், அவர்களை கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்திருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். வேலுார் மாவட்டம், அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள், 70. இவரது மருமகள் நதியா, 38. மகன், பேரன், பேத்தியோடு, ஒரே வீட்டில் மூதாட்டி வசித்தார். நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த வள்ளியம்மாள், நதியா ஆகியோர், தங்களை ஏதோ கடித்து விட்டதாக கூறி, கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு கு டியாத்தம் அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். உடல் முழுக்க விஷம் பரவி இருந்ததால், முதலுதவி சிகிச்சை அளித்து, வேலுார் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே வள்ளியம்மாள் இறந்தார். நதியா ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர். டாக்டர்கள் கூறுகையில்,- 'இருவரையும் கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்திருக்க வேண்டும். வேறெந்த பூச்சி கடித்திருந்தாலும், விஷம் உடல் முழுக்க பரவாது' என்றனர்.