வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை கொள்ளை
வானுார் : கிளியனுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை, 90 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிளியனுார் அடுத்த எறையானுார் வி.கே.எஸ்., பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா, 38; இவர் கடந்த 9ம் தேதி, வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே அறையில் பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள், 750 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் 3 பத்திரங்கள் கொள்ளை போனது தெரியவந்தது.தகவல் அறிந்த கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் மாதவன், கார்த்திகேயன் மற்றும் கைரேகை நிபுணர் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.