விழுப்புரம் மண்டலத்திற்கு 81 பஸ்கள் ஒதுக்கீடு; இதுவரை 66 இயக்கம்: பொன்முடி தகவல்
விழுப்புரம் : விழுப்புரம் பஸ் நிலையத்தில், புதிய அரசு பஸ்கள் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சார்பில், மகளிர் விடியல் பயண புதிய டவுன் பஸ்சை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பொன்முடி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், 'தமிழக முதல்வர், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கூடுதலாக புதிய வழித்தடங்களில் பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.இன்று துவக்கப்பட்டுள்ள புதிய டவுன் பஸ், விழுப்புரம் முதல் பெரம்பை வரை கோலியனுார், வளவனுார், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்படும்.விழுப்புரம் மண்டலத்திற்கு 81 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை 51 புறநகர பஸ்கள் மற்றும் 15 டவுன் பஸ்கள் என 66 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது' என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், விழுப்புரம் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சதிஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.