திருமண ஊர்வலத்தில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமண விழா ஊர்வலத்தில் போதை நபர் தாக்கியதில் வாலிபர் மண்டை உடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த வி.புதுாரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 28; இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது, பெண் அழைப்பு ஊர்வலத்தில் அதே ஊரைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர், குடிபோதையில் நடனமாடினார்.மேலும் அங்குள்ளவர்களிடம் போதையில் பிரச்னை செய்ததால், தட்டிக்கேட்ட அஜித்குமார் என்பவரை விமல்ராஜ் சரமாரியாக தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த தாக்குதலில் மண்டை உடைந்த அஜித்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், விமல்ராஜ் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.