உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணி

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமான பணி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லீஸ் அணைக்கட்டு கட்டுமானப்பணி மற்றும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஏனாதிமங்கலம்-சுப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1950ம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்தில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையால் அணைக்கட்டு உடைந்து சேதமடைந்தது. இதனால், விவசாயிகள் புதிய அணைக்கட்டு கட்ட வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, அங்கு அணைக்கட்டினை ரூ.86.25 கோடியில் புதிதாக கட்டுவதற்கு சட்டப் பேரவையில் அறிவித்தனர். அரசாணை வெளியிட்டு, கடந்தாண்டு நவம்பர் மாதம் புதிய அணைக்கட்டு கட்டுமான பணி தொடங்கி நடந்தது. புதிதாக கப்பூர்-ஏனாதிமங்கலம் இடையே, 640 மீட்டர் நீளத்தில், 1.50 மீட்டர் உயரத்தில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது. கடந்த மாதம் பணிகள் முடிந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில், விவசாயிகளும் பார்வையிட்டனர்.இதனிடையே கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், புதிய அணைக்கட்டில் மழை நீர் நிரம்பி ஏரிபோல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், திடீரென அணைக்கட்டின் கரை பகுதியில் கொட்டிய மண் சரிந்தும், ஏரளூர் வாய்க்கால் பாலத்தின் சுற்றுப்பகுதியில் மண் சரிந்து உடைப்பும் ஏற்பட்டது. இதனால், புதிய அணைக்கட்டில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைத்து, அணைக்கட்டின் பலத்தை ஆய்வு செய்திட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.இதனையடுத்து, கலெக்டர் பழனி, எல்லீஸ் புதிய அணைக்கட்டு பகுதியில் நடந்த சீரமைப்பு பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: எல்லிஸ் அணைக்கட்டு கட்டும் பணிகள் 99 சதவீதம் முடிந்து. இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. 10 நாட்களில் பணிகள் முடிக்கப்படும். இந்த அணைக்கட்டின் மூலம் பருவ மழைக்காலத்தில், தென்பெண்ணையாற்றில் பெறப்படும் நீர், வலதுபுறம் எரளுர் மற்றும் ரெட்டி வாய்க்கால்கள் மற்றும் இடதுபுறம் ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என வாய்க்கால்கள் மூலம் 13,100 ஏக்கர் அளவில் பாசனம் வசதி பெறும். மேலும், சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் மேம்படும்.அணைக்கட்டு பலமாக உள்ளது. நீர்வளத்துறை வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி, அணைக்கட்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்டுமான முடிவிலும், தர நிர்ணயம் செய்யப்பட்டு, அடுத்தடுத்த நிலை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைக்கட்டு உறுதியான நிலையில் கட்டப்பட்டுள்ளது.நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகளில் 100 மீட்டர் அளவிற்கு கான்கிரிட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாய்க்கால் 500 மீட்டர் வரை தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட வாய்க்கால் கரையோரப்பகுதிகளில் கொட்டிய மண், மழையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும், விவசாயிகள் கோரிக்கை ஏற்று, இரண்டு பக்கங்களின் கரைகள் அமைக்கவும், பாதுகாப்பு கருதி அணைக்கட்டில் 500 மீட்டர் அளவிற்கு பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்திடவும், திட்ட மதிப்பீடு தயார் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ