உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவெண்ணெய்நல்லுார் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் இடித்து அகற்றம்

திருவெண்ணெய்நல்லுார் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் இடித்து அகற்றம்

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா ஆலயம், கோர்ட் உத்தரவின்படி, வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பருகம்பட்டு கிராமத்தில் ராகவன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து திருநாவலூர் ஏரிக்கு செல்லும் கிளை வாய்க்கால் கரை மீது மாதா ஆலயம் கட்டி வழிபட்டு வந்தனர்.வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை, ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டது.அதன்பேரில் மாதா ஆலயத்தை இடிக்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்பகுதி கிறிஸ்துவ மக்கள், ஆலயத்தை இடிக்காமல் நகர்த்தி வைக்க கால அவகாசம் கோரினர். அதிகாரிகள் பலமுறை அவகாசம் கொடுத்தும், ஆலயத்தை நகர்த்தி வைக்க கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதையடுத்து, ராகவன் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா ஆலயத்தை இடித்து அகற்ற நேற்று காலை 10:00 மணிக்கு தாசில்தார் ராஜ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மனோஜ் தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் மாதா கோவில் முன் கூடினர். டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்பகுதி கிறிஸ்தவர்கள் திரண்டு வந்து, மாதா ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். தொடர்ந்து மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, காலை 10:15 மணிக்கு இரண்டு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மாதா ஆலயத்தில் இருந்த மூன்று மாதா சிலைகளை பாதுகாப்பாக அகற்றினர். பின்னர் ஆலயத்தை முழுமையாக இடித்து அகற்றினர்.அகற்றப்பட்ட மாதா சிலைகள் வருவாய் துறை அதிகாரிகள் தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதா ஆலயம் அகற்றும் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, 60 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ