உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: தெற்கு மாவட்ட தி.மு.க.,தீர்மானம்
விழுப்புரம் : அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கிட, மாவட்ட தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றினார்.இதில், சென்னையில் வரும் 17 ம் தேதி நடைபெறும் தி.மு.க., முப்பெரும் விழாவில், திரளாக கலந்து கொள்வது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விருது வழங்குவதற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு, கலைஞர் விருது வழங்குவதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா நாட்டிற்கு சென்று, வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வர பாடுபட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, உலகத் தரம் வாய்ந்த செஸ் போட்டிகள், கார் பந்தயம் நடத்தி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துவரும் அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கிட, முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணை சேர்மன் தங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் தயா இளந்திரையன், நகர் மன்ற சேர்மன் முருகன், கற்பகம், பொறியாளர் அணி இளங்கோ, இளைஞர் அணி தினகரன், தகவல் தொழில் நுட்ப அணி கலைஞர் சிவா, முரசொலி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.