சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் மாவட்ட விவசாயிகள் தவிப்பு: பொது அரவை பகுதியாக அறிவிக்க இயக்குனரிடம் மனு
விழுப்புரம்: புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால், அந்த பகுதியின் (விழுப்புரம் மாவட்டம்) கரும்பினை அருகே உள்ள ஆலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு, அதனை பொது பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று, சர்க்கரை துறை இயக்குனரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.விழுப்புரத்தில் நேற்று ஆய்வு பணிக்கு வந்த தமிழ்நாடு சர்க்கரைத் துறை இயக்குனர் அன்பழகனிடம், விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன், முருகையன் தலைமையில் விவசாயிகள் சந்திக்கு கோரிக்கை மனு அளித்து கூறியதாவது: புதுவை மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், அங்கு கரும்பு அனுப்பி வந்த விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்பகுதி விவசாயிகள் கடந்த சிறப்பு அரவைப் பருவத்திற்கு படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பை அனுப்பினர். அந்த ஆலை அப்போது இயங்காததால், முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு தங்களது கரும்பை அனுப்பியுள்ளனர்.அங்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு, கடந்த 2023-24ம் ஆண்டு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையினை முதல் பருவம் மற்றும் சிறப்பு பருவத்திற்கு வழங்க வேண்டும். புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால், அந்த பகுதியின் கரும்பினை அருகே உள்ள முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கும், பெரியசெவலை சர்க்கரை ஆலைக்கும், படாளம் சர்க்கரை ஆலைக்கும் விவசாயிகள் விரும்பியபடி அனுப்பி வைப்பதற்கு, அதனை பொது பகுதியாக அறிவிக்க வேண்டும். இதனால், அந்த பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் சர்க்கரை ஆணையர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் அணுகி, அனுமதி பெற தவிக்க வேண்டியுள்ளது. இதனால், அந்த பகுதியை பொது பகுதியாக அறிவிக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் கடந்த 27.7.24ம் தேதி மின் கசிவினால் விவசாயின் கரும்பு தோட்டம் எரிந்துபோனது. அதிலிருந்த 4 டிராக்டர் டிரெய்லர்களும் எரிந்து சேதமடைந்துவிட்டது. அதில் 2 டிராக்டர்கள் அதிகம் சேதம் அடைந்துள்ளது. அதற்கு பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், இனி டிராக்டர்களை விவசாய நிலத்திற்குள் கொண்டு சென்று, கரும்பு லோடு ஏற்றுவதற்கு வாகன உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள். இதனால், விவசாயிகள் கூடுதல் செலவு செய்து, கரும்பை ஏற்றி அனுப்ப வேண்டி வரும். இதனை கருத்தில்கொண்டு, மின்சார தீ விபத்தில் சேதமடைந்த டிராக்டர் வாகனங்களுக்கு, தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.