பி.பி.டி., பொன்னி நெல் விதைகள் வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தரமான விதைகள் வழங்கப்படுவதில்லை. பி.பி.டி., பொன்னி போன்ற விரும்பும் நெல் விதைகளுக்கும் தொடர்ந்து தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.விழுப்புரத்தில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சீனுவாசன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:வேளாண்துறை வழங்கிய தக்கபூண்டு விதைகள் தரமில்லை, குறிப்பாக விக்கிரவாண்டியில் வாங்கிய விதைகள் முளைக்கவில்லை. இனி இருவேல்பட்டு, காகுப்பம் அரசு விதைப்பண்ணையில் தரமான முறையில் உற்பத்தி செய்து வழங்க வேண்டும். மாவட்டத்தில் அதிகம் பயிரிடும் பொன்னி, பி.பி.டி., நெல் விதைகள் வழங்காமல் உள்ளது. புதியரக விதைகள் கொடுக்கின்றனர். அதனை பயிரிட்டால் விலை போவதில்லை. விவசாயிகள் விரும்பும் தரமான விதைகளையே வழங்க வேண்டும்.வேளாண் அலுவலர்கள் கிராமங்களுக்கு வருவதில்லை, 3 கிராமத்திற்கு ஒரு வேளாண் உதவி அலுவலர் நியமிக்க வேண்டும். பல மார்க்கெட் கமிட்டியில் அரசு நிர்ணயிக்கின்ற விலையை வழங்குவதில்லை. குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பட்டா மாற்றம் பிரச்னை நீண்டகாலமாக உள்ளது. கூட்டு பட்டாக்களை தவறாக பதிவு செய்துவிட்டு, விவசாயிகளை அலைகழிக்கின்றனர். விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் 6 மணி நேரத்திற்கு வழங்கவில்லை. ஆலகிராமம் உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான மின் கம்பியால் ஆபத்தான நிலை உள்ளது. நந்தன்கால்வாய் திட்டத்தில் பனமலை ஏரியில் தடுப்பணை கட்ட வேண்டும். பரனுார் ஏரிவாய்க்கலை சீரமைக்க வேண்டும்.
சம்பிரதாய கூட்டம்: விவசாயிகள் வேதனை
விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்திற்கு அதிகளவில் மனுக்கள் வந்தும், துறை சார்ந்த அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவில்லை. பெயரளவில் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. வானுார் தாலுகா அலுவலகத்தில் கிடப்பில் உள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவிட்டாலும், தாலுகா அலுவலகங்களில் பணிகள் நடப்பதில்லை என்றனர். அதற்கு வானுார் தாசில்தார் மறுப்பு தெரிவித்து பேசியதால், விவசாயிகள் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, கலெக்டர் பழனி பதிலளிக்கையில், 'குறைகேட்புக் கூட்டத்தில் வரும் மனுக்கள், அதன் மீது நடவடிக்கை விபரங்களை தெரிவிக்கப்படும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வுக்கு சென்று மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுப்பார்கள். கால்நடைத்துறை திட்டங்கள் குறித்து விளக்கப்படும். மழை நிவாரணம் குறித்து, புள்ளி விபரம் எடுத்து அனுப்பி வைக்கப்படும்' என்றார்.