விவசாய பணி செய்வதற்கு தனிநபர் முன்மொழிவு வரவேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விவசாய பணிகள் செய்வதற்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர்களின் முன்மொழிவுகள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் பயன்பெறும் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள், பொதுமக்கள், சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை மேம்படுத்த பல்வேறு விவசாயம் சார்ந்த பணிகள் இந்த திட்டத்தின் கீழ் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன்படி, விவசாய பணிகள், தனி நபர் பண்ணை குட்டை அமைத்தல், தனிநபர் நிலங்களில் மண்வரப்பு மடித்தல், கால்நடை தீவன புல் வளர்த்தல், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் அமைத்தல், தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல், நாற்று பண்ணை உருவாக்குதல், தனிநபர் நிலம் சமன்பாடு செய்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த முன்மொழிவுகள் வரவேற்கப்படுகிறது.இது தொடர்பாக மேலும் விபரங்களைப் பெறவும், முன்மொழிவுகளை அளிக்கவும் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இயங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பிரிவின் பி.டி.ஓ.,வின் 7402606336 என்ற மொபைல் எண்ணில், அந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் துணை பி.டி.ஓ.,க்களை தொடர்பு கொள்ளலாம்.விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான விவசாயிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டம் மூலம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற வேண்டும்.