அமைச்சர் பதவி ஆன் தி வே மஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
மாவட்ட செயலாளராக உள்ள மஸ்தான் எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாராகவும், அமைச்சராகவும் மஸ்தான் எம்.எல்.ஏ., இருந்தார். இவரிடம் இருந்து இரண்டு பதவிகளையும் கடந்த ஆண்டு கட்சி தலைமை அதிரடியாக பறித்தது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பதவியை மீண்டும் கடந்த மாதம் 13ம் தேதி மஸ்தானுக்கு வழங்கியது.பதவி பறிப்பிற்கு பிறகு 8 மாதமாக செஞ்சி தொகுதியில் முடங்கி இருந்த மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் பதவி வந்ததும் தற்போது வடக்கு மாவட்டத்தில் உள்ள மயிலம், திண்டிவனம் தொகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.செஞ்சி தொகுதிக்கு மட்டும் எம்.எல்.ஏ.,வான இவர், அமைச்சராக இருந்த போது மற்ற தொகுதிகளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் சிக்கல் இல்லாமல் இருந்தது. தற்போது மாவட்ட செயலாளராக மட்டும் இருப்பதால் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உள்ள திண்டிவனம் தொகுதியிலும், பா.ம.க., எம்.எல்.ஏ., உள்ள மயிலம் தொகுதியிலும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்கு இரண்டு கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.எனவே சட்டசபை தேர்தலை சந்திக்க உரிய அங்கிகாரம் வேண்டும். இதற்கு அமைச்சர் பதவி அவசியம் தேவை. இதனால் கட்சி தலைமை அமைச்சர் பதவியை மஸ்தானுக்கு மீண்டும் வழங்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.